Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Thursday 5 January 2012

குரு படத்திலிருந்து - கவிதை

வான வில் வரையும் வானம்
மழையிலே நனையும் தோட்டம்
 கரைகளின் காதிலே நதி சொல்லும் வார்த்தைகள்
இன்பமோ இன்பமே


கண்விழித்தால் வெண்நிலவு
கை நிறைய காதலர்கள்
ரகசியம் பேச தேவதைகள்

எந்தன் கனவில் எத்தனை எத்தனை எத்தனை நினைவு
யாரை கேட்பேன் யாரை கேட்பேன்
நாளை சொன்னால் இன்புறுவேன்






Wednesday 27 July 2011

ஜென் -கவிதை -

ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெங் டீ சான் (Zeng T”san) “அப்பழுக்கற்ற நம்பிக்கையுள்ள மனம்” என்னும் நீண்ட கவிதையில் ஜென்னுடன் நம்மை நெருங்கச் செய்கிறார்.
அப்பழுக்கற்ற நம்பிக்கையுள்ள மனம்
——————————————
தனது விருப்பங்களில் பற்றில்லாதவருக்கு
உன்னதமான அந்தப் பாதை கடினமானது அல்ல
ஏக்கமோ ஒவ்வாமையோ இரண்டும் போகட்டும்
ஒவ்வொன்றும் தெள்ளத் தெளிவாகும்
வானமும் பூமியும் வெவ்வேறானவையே
நீ நூலிழையான வேறுபாட்டையே நோக்கினால்
நீ உண்மையை உணர வேண்டுமென்றால்
ஏற்றலையும் எதிர்ப்பதையும் விட்டு விடு
நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடைப்பட்ட போர்
மனதின் அடிப்படை நோயாகும்
ஆழ்ந்த உட்பொருளை நாடாமல்
மனதின் அழகிய சூழலை அவஸ்தைப் படுத்துகிறாய்
பிரபஞ்சத்தைப் போல விளிம்பற்றதாய்
குறையேதுமின்றி முழுமையானதாய்
அதை நீ காண இயலாததற்குக் காரணம்
நீ அறிந்ததெல்லாம் தேர்ந்தெடுப்பது அல்லது நிராகரிப்பது
உலகுடன் சிக்கிக் கட்டுறாதே
உள்ளீடற்ற உலகில் உன்னை இழக்காதே
அனைத்தும் ஒன்றெனும் உணர்வில் அமைதி காண்
எல்லாத் தவறுகளும் தானே மறையும்
‘தாவோ’ வாழ்க்கையை நீ வாழா விட்டால்
அறுதி செய்வதும் மறுப்பதுமாய்க் கழியும் உன் காலம்
உலகம் உண்மையென்று நீ அறுதியிட்டால்
அதன் ஆழ்ந்த உண்மையைப் புறந்தள்ளுகிறாய்
உலகின் உண்மையை நீ மறுத்தால் நீ காணாதது
எல்லா உயிர்களுள் உறையும் தன்னலமின்மையை
இவற்றையெல்லாம் பற்றி எவ்வளவு யோசிக்கிறாயோ
அந்த அளவு உண்மையை விட்டு விலகுகிறாய்
சிந்தனை எல்லாவற்றிடமிருந்தும் விலகி நில்
நீ அடைய முடியாத இடமே இல்லை
வேரை நோக்கித் திரும்பினால் அர்த்தத்தை உணர்கிறாய்
தோற்றங்களைத் துரத்தினால் வெற்றிடத்தை
உண்மையைத் தேடிக் கொண்டே இருக்காதே
அபிப்ராயங்களை (கருத்துக்களை) விட்டுத் தள்ளு
தாவோ உடன் ஒருங்கிணைந்த மனதிலிருந்து
வெறுமை நீங்கி விடும்
நீ தன்னை சந்தேகிக்கா விட்டால்
பிரபஞ்சத்தை முழுமையாக நம்பலாம்
பார் நீ திடீரென விடுதலையாகி விட்டாய்
பற்றிக் கொள்ள ஏதும் மீதவில்லை
எல்லாமே சூன்யமாய் பிரகாசமாய்
தன்னளவில் முழுமையாக -
‘தான்’ ‘தான் இல்லை’ என்ற இரண்டுமே அற்ற
உலகில் தன்வயமாய் இருக்கின்றன
அதன் சாரத்தை நீ வர்ணிக்க விரும்பினால்
‘இரண்டில்லை’ என்பதே ஆகச் சிறந்தது
எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும்
ஞானம் பெற்றோர் அதன் உண்மைக்குள் கலந்தனர்
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்
அபூர்வமான லாப நட்டமற்ற நிலை அது
இவ்விடம் அவ்விடம் என்று ஏதுமில்லை
விளிம்பற்ற வெளி உன் கண் முன்னே
நாம் ஏற்படுத்திய எல்லைகள் அழிந்தால்
கடுகளவானதும் பிரம்மாண்டமும் ஒன்றே
வெளிப்புற வேலிகள் இல்லையேல்
பிரம்மாண்டமும் கடுகளவும் ஒன்றே
இருப்பது இல்லாமலிருப்பதின் ஒரு அம்சமே
இல்லாமலிருப்பது இருப்பதிலிருந்து வேறானது அல்ல
இதைப் புரிந்து கொள்ளும் வரை நீ எதையும்
தெளிவாகக் காண்பது இயலாது
ஒன்றே பலவும் பலவும் ஒன்றே இதை
உணர்ந்தால் புனிதமும் ஞானமும் எதற்கு?
பரிபூரணமான நம்பிக்கையில் எல்லா ஐயங்கள்
இடையறா முயற்சிகள் அனைத்தையும் தாண்டி
மனம் பூரண சாந்தி பெறும்
அங்கே நேற்றில்லை இன்றில்லை
நாளையுமில்லை


- நன்றி திண்ணை இணையதளம்

Tuesday 28 December 2010

சசு என்றொரு அண்ணன்

நேற்று நடந்த நிகழ்வு - 28 டிசம்பர் 2010
சசுகாந்த் சண்முக வேலாண்டி பற்றிய சிறு குறிப்பு
                                         சசு 31 வயது விமான நிலையத்தில் பணி புரியும் இயந்திரவியல் படித்த பொறியாளர்...சொந்த ஊர் எதுவென்று கேட்டால் சில மாவட்டங்களைச் சொல்லி இங்கெல்லாம் இவ்வளவு காலம் இருந்ததால் எது என்று தெரியாது என்பார்....எனக்கு இவரை மே 2010 லிருந்து சோசப் அண்ணன் மூலம் பழக்கம்..நானும் இவரும் ஒரே வாரத்தில் பிடோக் வீட்டிற்கு குடி புகுந்தோம்...முதல் சில வாரங்கள் பெயர் சொல்லி அழைத்தாலும்..பிறகு அண்ணா என்று அன்புடன் அழைப்பேன்...வீடடில் சற்று நெருங்கி பழக கூடியவர் இவர்தான்...அடிக்கடி கிண்டலாக இருவரில் யாரேனும் ஒருவர் தான் வீட்டில் இருப்போம் என்று சண்டையிடுவோம்....நீ வெளியே போ என்ற அவர் சொல்ல...நானும் என் பங்கை பிரி  நான் வெளியே போகிறேன்...உங்களிடம் என்னால் குப்பை போட முடியாது என்று பேசி விளையாடுவோம்....என்னுடைய சிறு குறும்புகளை சகித்துக் கொண்டும் திட்டிக் கொண்டு நட்பு பாராட்டக் கூடியவர்..நல்ல பண்பாளர் என்பது  தெரிந்திருந்தாலும்..நேற்றைய சம்பவம் என்னுள் அவரின் தன்மையை வெளிகொணர்ந்தது

நேற்றைய சம்பவம்
                    நேற்று மருத்துவ விடுப்பால் ஓய்வில் இருந்தேன்...மாலை வீட்டு நண்பர் விசயும் (Admin) நானும் கீழே சென்று கடையில் சமைக்க தேவையான பொருட்களை வாங்கி வர புறப்பட்டோம்...முன்பே சசு தொலைபேசியில் இன்று மீன் சமைங்க விசய் என்று அவரிடம் கூற முடியாது இன்று கோழி என்று மறுத்தேன்.( விளையாட்டாக)...பிறகு கீழே வரும் போது சசுவும் அலுவலகம் முடிந்து  குடியிருப்புக்கு கீழே எங்களுக்கு எதிர் முனையில் நடந்து வந்து கொண்டிருந்தார்...
                 அவரைக் கண்டவுடன் நான் அவரை நோக்கி வேகமாக ஒடி சென்று மார்பினை எம்பி தள்ளினேன் (இருமுறை)...2ம் முறை விளையாட்டாக செய்த இந்த வேலை வினையானது சில நிமிடங்களுக்கு....அவருக்கு உடனே கோபம் தலைக்கேற என்னை நோக்கி வந்தார்...நான் தள்ளி விட்ட பின் பின்னோக்கி நகர்ந்தேன்...அவரோ என்னிடம் வந்து ஓர் அடி வேகமாகவும் கோபமாகவும் வைத்தார்....ஆனால் தர்ம சங்கடமாயிற்று...எப்போதும் அப்படி கோபப் பட கூடியவரல்ல...ஆனால் ஏன் அடித்தார்....ஒருவேளை அலுவலகத்தின் கோபம் அல்லது நான் தவறு செய்தோனோ என்று எண்ணியபடி என் அடிக்கிறாயா நீ என்ற எனக்கு இயற்கையாக அவர் அடித்தது எனக்கு கோபம் வரவில்லை...ஆனால் அவர் அடித்ததது விளையாட்டுக்கன்றி உண்மையாக இருப்பதால் நானும் எதிர்வினை புரிந்தாக வேண்டும்...நானும் அடித்தாக வேண்டும்...எனவே நானும் கோபப்பட்டேன்..ஆனால் நான் கோபப்பட ஆரம்பிக்கும் போது அவரின் கோபம் தணிந்தது...இதனால் பிரச்சினை பெரிதாகவில்லை..எங்களிடையே பெரிய பிரச்சினை வர வாய்ப்பு இல்லை...ஏனெனில் எங்களிடம் பகையில்லை..பிறகு விசய் தடுக்க அண்ணனும் சாந்தமாகி என்னை அணைத்து sorry என்று சொல்ல நானும் அமைதியடைந்தேன் அன்றி பழைய நிலையை அடையவில்லை....

நானோ..உனக்குத்தான் அடிக்க தெரியுமோ நான் திருப்பி அடிச்சா என்று சொல்ல சசுவும் முடிந்தா அடித்துப் பார் என்று சொல்ல எனக்கு கோபம் வந்ததது..அடித்தால் என்ன ஏன் என்னால் முடியதா என்ற வந்தது...பின்..அண்ணா முடிந்தா என்ற வார்த்தையை பயன்படுத்தாதே வேண்டாம்...ஏன் என்றால் அப்படிச் சொல்ல எனக்கு அடிக்க வேண்டும் என்ற  எண்ணம் மேலோங்கி அடித்துவிட்டால் எங்களிடம் நட்பு கலங்கப்படும்...

சசு : நீ பண்ணியது எனக்கு கோபம் வந்தது அதனால் அடித்தேன்...அது ஒரு நிமிடம் தான்...மற்றவர் மாதிரி மனதில் வைத்துக்கொண்டு பழி வாங்க தெரியாது..
நான்    கோபம் வந்தா அடிப்பாயா.... 

சசு  : அடிச்சேன் Sorry சொல்லி விட்டேன் அப்புறம் என்ன..

நான்  : அமைதி

பிறகு சரி விடு என்ற சொல்ல மாடி படி ஏறினார்....நானும் விசய்யும் கடைக்கு சென்றோம்....

பின்பு வீடு திரும்பியவுடன் பழைய நிலைக்கு திரும்பினோம்..சசு கோபத்தில் அடித்தற்கான நியாயம் அவரின் மார்பில் நான் கை வைத்து தள்ளிய போது அவரின் தங்கச் சங்கில் கீறி காயம் உண்டாக்கியதே என்று அறிந்தேன்...இருப்பினும் அதற்கு முன்பே அச்சம்பவம் மறந்ததால் மீண்டும் எதுவும் பிரச்சினையில்லை...

இதனால் கற்ற பாடம்

  •  மன்னிப்பு அனைவராலும் கேட்க முடியாத ஒன்று..சசு மன்னிப்பு கேட்டு பெரிய மனிதர் ஆகிவிட்டார்.
  •  கோபம் வந்த நிலையிலும் நிலைமையினை அறிந்து நான் செயல்பட்டேன்...(வார்ததைகளும்..செயல்களும்)
  • உண்மையான நட்பு இருக்கும் போது பிரச்சினை பெரிதாக வாய்ப்பில்லை.இச்சம்பவம் ஒர் நிரூபணம்
  • சம்பவம் முடிந்து பழைய நிலைக்கு திரும்புவது எனக்கு எளிதல்ல..ஆனால் இம்முறை விரைவில் பழைய நிலைக்கு திரும்பியாயிற்று
  • இதுவரை யாரையும் வன்மையான கோபம் கொண்டு தாக்கியது இல்லை..ஆனால் அதுபோல் ஒருநாள் என் எதிரியை அடிக்க வாய்ப்பு கிடைக்காத என்று ஏங்கி கொண்டிருந்தாலும்...அதற்கான நேரம் இதுவல்ல என்று கோபம் வந்த போதும் கூட என்னுள் ஒர் குரல் ஒலித்தது. ஆனால் இன்னும் என்னை என்னால் முழுமையான சாத்வீகவாதியாக என்னை பறைசாற்றிக் கொள்ள முடியவில்லை..ஏனெனில் என் எதிரியை தாக்குவதற்கான வாய்ப்பை இன்னும் என் மனம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே இந்த எண்ணம் என்னுள் இருந்து மறையும் வரை நான் சாத்வீகவாதியாக மாற முடியாது.
பின் குறிப்பு
  •    இப்பதிவு நான் விளையாட்டாக செய்ததை அண்ணன் மறக்கவும்..அண்ணன் அடித்ததை நான் மறக்கவும் எழுதப்பட்ட பதிவு...இவ்வளவு பெரிய பதிவு எழுதி மாதங்கள் பலவாயிற்று..
  • ஒபாமா விருந்து கொடுத்தது போல் அண்ணாரும் ஒரு இரவு உணவு விருந்தளித்து உற்சாகப்படுத்துவார் என்றே எழுதியிருக்கிறேன்.
 எனக்கு சசு வீட்டு நண்பராக அன்றி அண்ணனாக இருக்கிறார் என்று உள்ளுணர்வு ஏற்பட்டது...தம்பியின் நீண்ட நாள் கோரிக்கையான மதுவிலக்கை அண்ணார் விரைவில் அமல்படுத்துவார்.







Monday 22 November 2010

உண்மைச் சம்பவம் - 21 நவம்பர் 2010 சிங்கை கிழக்கு கடற்கரை

நேற்று நாங்கள் கிழக்கு கடற்கரையில் வரும்வழியில் நடந்த என் மனதை உலுக்கிய சம்பவம்

நாங்கள் மூவர் (பெயர் யார் யார் என்று வெளியிட வேண்டாம்) கூட்ட இடத்தினை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தோம். மெக் டொனால்டு உணவகத்திற்கு அருகில் உள்ள சைக்கிள் வாடகைக்கு விடும் கடைக்கு வந்துவிட்டோம்...சைக்கிள்கள் மற்றும் கால் சக்கரம் கொண்டு நடப்பவர்கள் எங்களை கடந்து சென்று கொண்டிருந்தனர்...அதுவரை அனைத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் நடந்து கொண்டிருந்தோம்...மூவரும் தங்களது வெளிநாடு பயணங்களை முடித்துத் திரும்பியதால் தம் அனுபவங்களை அசைப் போட்டப்படியும் கடற்கரை அழகை ரசித்துக் கொண்டும் சென்று கொண்டிருந்தோம்...அப்போது சுமார் 18 வயது நிரம்பிய அல்லது அதற்கும் குறைந்த அகவையுடைய சிங்கைவாழ் தமிழ் இளைஞர்கள் மூவர் (காதில் கடுக்கன் தலைமுடி நிறத்தினை கொண்டு அவர்கள் இங்கு பிறந்தவர்கள் என்று யூகித்தோம்.) எம் மூவரில் அந்த சிறப்புக்குரிய நபரிடம் அண்ணா என்று அன்போடு அழைத்தான்..அவரும் ஆசையாய் அழைக்கிறான் என்று திரும்பி என்ன தம்பி ! பதிலளிக்க...அடுத்து அவன் கேட்ட கேள்வி எங்கள் இருவரையும் திக்கு முக்காட செய்தது...அந்த இடத்தில் அதுவும் அவரிடம் அத்தைகய கேள்வியை அவன் கேட்கிருக்க கூடாது...ஆனால் கேட்டுவிட்டான்..எங்கள் இருவருக்கோ அதிர்ச்சி தாங்க வில்லை...ஆனால் அண்ணன் என்று அழைக்கப்பட்டவர் தம்பியின் தோளில் கையை வைத்து எந்த ஒரு அதிர்ச்சியும் இன்றி பெரியவருக்குரிய பொறுமையுடன் கேள்விக்கு தக்க பதிலளித்தார்...

இதெல்லாம் எங்கள் இருவரால் சீரணிக்க கூட நேரமில்லா அக்கணத்தில் அந்த வாலிபன் கேட்ட அடுத்த கேள்வி ஒருவேளை எங்கள் இதயம் பலவீனமாக இருந்திருந்தால் இதை எழுதிக் கொண்டிருக்க நான் இன்று இருந்திருக்க மாட்டேன்...ஆனாலும் அத்தகைய மனதை உலுக்கிய கேள்வி கேட்க அவனுக்கு எப்படி இதயம் இணங்கியதோ தெரியவில்லை...கேட்டவுடன் அவனிடம் இருந்த புன்னகைக்கு என்ன பொருள் என்று விளங்கவில்லை...ஆனால் எங்களுடன் வந்திருந்தவர் அமைதியின் திருவுரு...ஒருவேளை அந்த வாலிபன் மிகச்சரியான நபரை தேர்ந்தெடுத்தான் அந்த கேள்விகளை தொடுத்திருக்க வேண்டும்..அவன் கேள்விகளைப் பற்றி சிந்தித்த நேரத்தினை விட யாரிடம் கேள்வி கேட்கலாம் என்று அதிகம் யோசித்திருப்பான்..அதனாலாயே அவன் அவரிடம் கேள்வி கேட்டான்..அதற்கு பதிலை அவரும் அன்புடன் எடுத்துரைத்தார்


கேட்ட கேள்வி என்ன ??

கேள்வி 1 அண்ணே இசிபி (ECP) எங்க இருக்கு ?
பதில் 1 இதுதானப்பா இசிபி
கேள்வி 2 இசிபி கடல் இருக்கும் சொன்னாங்க அது எங்க
பதில் 2 அதோ தெரியுது பார் அதான் கடல்


கேட்டவர் வயது: 18
இடம் :சைக்கிள் உலா வரும் பகுதி
பதிலளித்தவர் வயது: 34 இருக்கலாம்


என் கேள்வி என்னவென்றால் நாங்கள் மூவர் நடந்து செல்ல அந்த வாலிபன் அவரிடம் மட்டும் கேட்டது எனக்கு விளங்கவில்லை
யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்க :) :)

Sunday 4 July 2010

வேர்களைத் தேடி...

சிங்கைப் பதிவர்கள் குழு மணற்கேணி-2009 நிகழ்வின் முத்தாய்ப்பாக வெளிவந்த மணற்கேணி என்ற நுாலில் வெளி வந்த எனது கட்டுரை 


வேர்களைத் தேடி...

                மண்ணில் மறைந்திருந்தாலும் மரங்களுக்கு வேர்கள்தான் உயிர்நாட. எவ்வளவு உயரம் வளர்ந்திருந்தாலும் வேர்களின்றி இம்மண்ணில் உயிர் வாழ இயலாது. அதுபோல உலகில் எங்கிருந்தாலும் வேர்களான பிறந்த இடத்தை மறந்தால் வாழ்க்கையில் உயிர் இருக்காது. இவ்வாறு இடம்பெயர்வால் ஏழும் நன்மை தீமைகள் பற்றிய ஒர் பார்வை தான் இச்சிறு கட்டுரை.
                நாடோடிகளாக வாழ்ந்து திரிந்த மனிதன் ஒர் இடத்தினை வாழ்விடமாக கொண்டதனால் நாகரீகம் பிறந்தது. ஆனால் இன்று நாகரீக வாழ்வு என்ற போர்வையில் இடம்பெயர்வு அரங்கேறிக் கொண்டுள்ளது. இடம்பெயர்வு என்பது காலத்தின் கட்டாயம் என்றாலும் இதனால் நமக்கு கிடைத்த வாழ்வியல் நிலையும் இழந்த வாழ்வியல் நிலையும் ஒப்பீடு செய்கின்ற கால கட்டத்தில் இருக்கின்றோம்.
                இன்றும் நமது ஊர்களில் சில குடும்பங்களின் பெயர்கள் அவர்கள் எங்கிருந்து (சேலத்தான்,திருச்சிகாரன்.கிண்டியான்) இடம்பெயர்ந்து வந்தார்கள் என்பதை உணர்த்தும் வகையில் இருக்கும். ஆனால் இத்தகைய இடம்பெயர்வுகள் சில தலைமுறைகளுக்கு முன்பு பஞ்சம்,வறட்சி, இயற்கை இடர்கள் போன்ற தவிர்க்க இயலாத காரணங்கள் இருக்கும்.அப்படி அவர்கள் இடம்பெயர்ந்து  வந்த இடமோ அவர்கள் முற்றிலும் அறியாத இடமாக இருக்காது. ஊரை ஏமாற்றி சென்றவன் தான் முன்பின் தெரியாத ஊர்களுக்கு இடம்பெயர்வார்கள். ஆனால் முன்பு கூறியவர்கன் இடம்பெயர்ந்த ஊர்கள் பெரும்பாலும் பெரும்பான்மையான உறவினர்கள் இருக்கும் இடம் அல்லது முன்பே நன்கு பரிச்சயப்பட்ட இடமாக இருக்கும். ஆகையால் இத்தகைய இடம்பெயர்வுகள் அவர்கள் மனதில் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு (அ) புதிய இடங்களில் இருக்கிறோம் என்ற உணர்வு இருக்காது. ஆனால் நாம் இங்கு ஒப்பிட இருப்பது பொருளாதார முன்னேற்றம் காரணமாக நாகரீக வாழ்வது கருதியும், இருக்கும் ஊர்களில் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்தும் அவசியமற்ற இடம் மாறுதலையே இடம்பெயர்வு என்கிறோம்.
                மனிதர்கள் குழுக்களாக கூடி வாழ்ந்து வருவதே தங்கள் இன்ப துன்பங்களை பகிர்ந்து வாழ்வதற்குதான். சார்ந்து வாழ்தல் என்பது இயற்கையின் நியதி, குழுக்களாக இணைந்திருக்க ஏதோ ஒரு காரணம் இன்றியமையாதது. இவற்றில் நாடு, மதம்,இனம் , மொழி, சாதி போன்றவை இருக்கின்றன, நாடு, மதம், மொழி, சாதி என்று மக்கள் பிரிந்து கிடக்கிறார்கள் என்ற கோணத்தில் பார்ப்பதை விட இப்படிப்பட்ட எல்லைகளுக்குள்ளாவது இணைந்து வாழ்கிறார்களே என்று பாருங்கள். இத்தகைய பிரிவுகள் தங்களுக்குள் பிரிவினை வாதம் வளர்க்காமல் இருந்தால் நன்மைதான்.
               
                சமூக வாழ்க்கை முறையில்  கோயில்கள் எப்போதும் சமூக ஒற்றுமையில் முக்கிய பங்காற்றி வருகிறது. நடைமுறையில் இன்றும் தத்தம் சமூகங்களுக்கு தனித்தனி கோயில்கள் இருக்கின்றன. அதன்பொருட்டு அவர்கள் ஒன்றிணைய வாய்ப்பு கிடைக்கிறது. பொதுவாக எல்லா கிராமங்களிலும் உள்ள தெருமுனைகளில் விநாயகர் வீற்றிருப்பார். அக்கோயிலைச் சுற்றி சிறார்கள் விளையாடி விட்டு அன்றிய வழிபாட்டில் கிடைக்கும் சுண்டலுடன் வீடு திரும்வது வழமை. இரவு உணவுக்குப் பிறகு இளைஞர்கள் பொது இடங்களில் கூடுவார்கள், பெரியவர்கள் ஒர் குழுவாக தேநீர் கடைகளிலோ அல்லது கோயில்களிலோ கூடி ஊர்க்காரியங்கள் கோயில் நற்செயல்கள் போன்றவைப் பற்றி பேசுவார்கள். பொதுவாக பெண்கள் தங்கள் தெருக்களைத் தாண்டி நட்பு வட்டத்தினை விரியச் செய்வதில்லை. ஒரே தெருவில் இருக்கும் பெண்களின் பேச்சு பொதுவாக சமையல் பற்றியும் மெகாத்தொடர்கள் பற்றியும் இருக்கும்.
                ஆனால் இந்த மெகாத்தொடர்கள் தான் இன்று இவர்களிடையே இடைவெளியை கொண்டு வருகிறது, ஏனெனில் பொழுது சாயும் நேரத்திற்குப் பின்புதான் இவர்களின் ஒன்று கூடல் நிகழும். ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாக தொடர் நாடகங்கள் வந்து விட்டன.

                பெருநகரங்களில் வாழ்பவர்கள் அவர்களின் இந்த பேச்சுகள் நேரங்களை வீணடிப்பாதாக தோன்றும், ஆனால் அவர்களின் பேச்சில் கருத்துக்கள் இல்லாமல் இருப்பினும் கூட அந்த உரையாடல்கள் அவர்களின் மனங்கள் உறவாடிக் கொள்ள உதவுகின்றன, அங்கு ஒர் மனம் இன்னொரு மனத்திற்கு ஆறுதல் சொல்லும் நம்பிக்கை தரும், துன்பத்தினை தாங்கும் சுமைதாங்கியாக இருக்கும். நான் பிறந்து வளர்ந்தது கிராமப்பகுதி என்பதால் மேற்கண்ட விடயங்களை முன் வைத்தேன். இதே போல் நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கும் இது போன்ற விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன,
கோயில்கள் போன்ற திருவிழாக்களும் சமூக ஒற்றுமையில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் இன்று விழாக்கள் நடத்த ஊர்ப் பெரியவர்களுக்கு கடினமாக உள்ளது, திருவிழாப்பணி செய்ய இளைஞர்கள் ஊரில் இருப்பதில்லை, அவர்களோ தீபாவளி பொங்கல் போன்ற பொது விடுமுறைக் காலங்களில் தான் ஊர் திரும்புவார்கள். இடம்பெயர்ந்து நகரங்களுக்கு சென்றவர்கள் கூறி கேள்விப்பட்டிருக்கிறேன் ,” கழிப்பிட வசதி இல்லாதலால் கிராமத்தில் எப்படி ஒரு வாரம் காலம் கழிப்பது”. அந்த ஊரில் தான் இடம்பெயர்வுக்கு முன்பு வரை கழித்தால் காலத்தினை. இப்போது மட்டும் எங்கிருந்து வந்ததது இந்த குறை. குறைதான் அடிப்படையான கழிப்பிட வசதி இல்லை என்பது குறைதான். ஆனால் அதை உண்டாக்க முடியாத நாம் பட்டதாரிகளாக இருந்து என்ன பயன் நாம் பிறந்த அந்த கிராமங்களுக்கு, அந்த அடிப்படை வசதியினை கொண்டு வருவது படித்தவர்களின் சமூகக் கடமை. சேரியிலிருந்து சென்று பட்டதாரியான ஒவ்வொருறும் கடமையை உணர்ந்திருந்தால் இன்று நம் நாட்டில் சேரிகள் இருந்திருக்காது
                 இடம்பெயர்வினால் வேறு ஊர்களுக்கு சென்றவர்களால் இன்று கிராமங்கள் சற்று தம் அமைப்பின் செயல்பாட்டில் மாற்றம் கண்டு வருகின்றது, இவ்வாறு இடம்பெயர்வுக்குட்பட்டு பெருநகரங்களுக்கு சென்றவர்கள் வாழ்க்கை முறை சிறப்பானதாக இருக்கிறதா என்றால் சொல்லும்படியா சிறப்பாக இல்லை.
                இடம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் சுழ்நிலையில் கட்டாயத்தின் காரணமாகவே மேற்கொண்டிருப்பார்கள், தாங்கள் படித்த படிப்புக்கு பட்டணத்தில்தான் வேலை கிடைக்கும் என்பதாலும் நாகரீக வாழ்வு வேண்டியும் குழந்தைகள் எதிர்காலம் கருதியும் இடம்பெயர்வு ஏற்பட்டிருக்கலாம்.
                இவ்வாறு இடம்பெயர்ந்த இடங்களில் புதிய உறவுகள் அமைந்து விடுகிறதா என்றால் இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை. அவை வெறும் சம்பிரதாய உறவுகளாகத்தான் அமைகின்றது. இத்தகைய சுழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு தங்களுடைய மாமா,சித்தப்பா,பெரியப்பா,அத்தை, சித்தி,பெரியம்மா உறவுகள் தரும் அன்பு கிடைப்பதில்லை, இத்தகைய அன்பு புதிய ஊர்களில் அமையும் உறவுகளில் கிடைப்பது அரிது.
                பெருநகர வாழ்க்கை முறையில் அண்டை அயலாருடன் நட்பு பாராட்ட நேரம் வாய்ப்பதில்லை, அப்படி நமக்கு நேரமிருப்பினும் அண்டை வீட்டாருக்கு நேரம் இருக்க வேண்டும், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கூட வார இறுதி நாட்களுக்கு தள்ளி வைக்கப்படுகின்ற அளவிற்கு நாம் நிலைமாற்றிக் கொண்டுள்ளோம். உணவுமுறை கூட மாறுதல் பெற்று விட்டது. குழந்தைகளுடன் அமர்ந்து பேசக் கூட நேரமின்றி வகுப்புகளுக்கு அனுப்பி விடுகிறோம். ஒரே வீட்டில் இருந்தாலும் வார இறுதி நாட்களில் மட்டும் சந்திக்கும் தம்பதிகளை கேள்விப்பட்டிருக்கிறேன்.  இது ஒருபுறம் இருக்க இதோ இவ்வருடம் சொந்த ஊருக்கு திரும்பி விடுகிறேன் என்ற வசனத்தை வாழ்நான் முழுதும் சொல்லிக்கொண்டு வாழ்க்கையை பெருநகரத்தில் கழித்தவர்களையும் கண்டிருக்கிறேன்.
          பெருநகரங்களில் வாழ்வது தவறு என்பது என் கருத்தல்ல,  அத்தகைய வாழ்க்கை முறை உங்களுக்கு உண்மையில் இன்பம் தருகிறது என்றால் கண்டிப்பாக வாழுங்கள்.
                அதைவிடுத்து பொருளாதாரத்தினை தேடி அலைவது மட்டும் இந்த வாழ்க்கை அல்ல, அதில் முழுமையாக இன்பம் கண்டவர்கள் யாருமிலர், ஆனால் வாழ்வின் இன்பத்திற்கு பொருளாதாரமும் ஒரு முக்கிய காரணி.ஆனால்  எதற்காக எதை இழக்கின்றோம் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.
இடம்பெயர்வு என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்,ஆனால் இடம்பெயர்ந்த இடத்தில் இன்பாக வாழ சுழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எல்லா மனிதர்களின் வாழ்க்கையில் ஒன்றுபட்ட குறிக்கோள் இன்பம் தான். அது கிடைக்கும் இடத்தில் இருப்பது சிறந்ததது. மகிழச்சிக்காகதான் பொருள் ஈட்டல் இன்ன பிற தேடல்கள். ஆனால் அத்தகைய தேடல்கள் மகிழ்ச்சியை சீர்குலைக்கும் எனில் அத்தகைய தேடல் தேவையற்றது.
                வேகமாக வாழ்ந்து வருவதால் பெரியதாக ஒன்றும் சாதிப்பாதாக இருந்தால் சரி என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சராசரி வாழ்க்கையில் இன்பம் பயக்கும் செயலுக்கும் நேரம் ஒதுக்குவோம்.நான் “கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது” - என்று மாபெரும் அறிவியல் மேதையான சர் ஐசக் நியூட்டனே சொல்லியிருக்கும் போது நாம் எவ்வாறு என்று சிந்திக்க வேண்டும்.
                இடம்பெயர்ந்து வாழ்ந்தாலும் அண்டை அயலாருடன் நட்பு பாராட்டுவோம், சற்றே தயக்கம் கலைந்து மனங்களுடன் உறவாடுவோம். மரத்தின் வேர்களுக்கு நீர் ஊற்றவில்லை எனில் மரம் அழிந்துவிடும், அதுபோல இடம்பெயர்ந்து வாழ்ந்தாலும் நம்முடைய வேரினை மறக்காது கிராமங்களின் முன்னேற்றத்திற்கு நீர் ஊற்றுவோம்


Wednesday 30 June 2010

சைவ சித்தாந்தம் - 6

வகுப்பு -2- தலைப்பு- கன்மம்

மும்மலங்களில் ஒன்றான ‘கன்மம்’ என்பதன் வடச்சொல் (தமிழர்களுக்கு வடச்சொல்லில்தான் பொருள் புரிகிறது ) கர்மா, சரியான தமிழ்ச்சொல் ‘வினை’

இந்திய பெரும்பான்மை மதங்கள் வினைக் கோட்பாட்டினை ஏற்றுக் கொள்கின்றன,எல்லா வினைகளுக்கும் விளைவு உண்டு ( நியூட்டனின் 3ம் விதி (சூர்யா படம் இல்லீங்க இது இயற்பியல் தத்துவம்). மூலகன்மம் நல்வினை தீவினை என்ற பாகுபாடு கிடையாது, வினை என்றால் ஒர் செயல், செயிலின் விளைவைப் பொறுத்தே வினைத்தன்மை நிர்ணயக்கப்படுகிறது


கன்மத்தின் (வினையின் இலக்கணம்)
• வினை ஒர் சடப்பொருள்
• வினை தானாக உயிரை சென்று பற்றாது,
• வேதாந்திகளும் முன்வினைப்பயன்,விதிப்பயன் கொள்கைகளை ஏற்றுக்கொள்கின்றனர், பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படையில் சில பண்புகள் இருக்கின்றன் அதற்குக் காரணம் முன்வினைப்பயனே
• சைவ சித்தாந்தம் டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு எதிரானது,ஒரே கால கட்டத்தில் புல் பூச்சி மற்ற எல்லா உயிரனஙகளும் தோன்றின என்கிறது சைவம்
• உயிர்களின் இயல்புக்கு மாறாக இறைவன் கூட செயல்பட முடியாது

• மனம்,வாக்கு, உடம்பு ஆகியவற்றின் உதவியால் உயிர் வினை புரிகின்றது,
மேற்கூறிய மூன்றும் அறிந்தும் அறியாமலும் என மொத்தம் அறுவகை வினை

“ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும் “ என்ற சிலம்புச் செய்தியிலிருந்து சமணமும்
(சிலம்பு இயற்றிய இளங்கோவடிகள் ஒர் சமணத் துறவி) வினைக் கோட்பாட்டினை ஏற்றுக் கொள்கிறது

வினைப்பயனிலிருந்து நீங்குதல்

கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்றால் கொன்றால் பாவம் தான் பாவத்தினை தின்றால் அனுபவித்தால் தீரும் என்று பொருள் கொள்க, கொன்றதை தின்றால் அல்ல.

• வினைப் பயனை அனுப்பவித்தல்

• வினைப் பயன் இறைவன் திருவருளால் நீ்ங்கும்

• வினையை நல்வினை தீவினை என்றில்லாமல் சமமாக பாவித்தால் வினைப்பயன் நீங்கும்

பின்குறிப்பு நடைப்பெற்ற வகுப்பில் என்னுடைய குறிப்புகளை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன்,,முழுமையாக சைவ சித்தாந்தம் படிக்க முனைவர் ஆறு நாகப்பனின் சித்தாந்த சைவம் நுாலினை நாடுக

தவிர்க்க முடியாத காரணங்களினால் அதன் பிறகு நடந்த வகுப்புகளில் நடந்தவைகளை குறிப்பு எடுக்க முடியவில்லை, மேலும் அந்த வகுப்புகளின் பொருளும் முழுமையாக என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை
இப்போதுதான் ஆறு நாகப்பன் ஐயா எழுதிய சித்தாந்த சைவம் என்ற நுாலின் மலேசியாவிலிருந்து வாங்கி உள்ளேன்,,,படிக்க படிக்க பதிவுகளும் வரும் 

Wednesday 2 June 2010

சைவ சித்தாந்தம் - 5


இரண்டாம் நாள்


முதல் வகுப்பு -தலைப்பு ஆணவம்

மும்மலங்கள்  ஆணவம் கன்மம்,மாயை என்பன. பின்வரும் பதிவுகளில் ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்.

பொதுவாக சைவ சிந்தாந்த சொற்களுக்கும் நாம் நடைமுறையில் பயன்படுத்த படும் சொற்களுக்கும் பொருள் முற்றிலும் மாறுபடுகின்றது. சைவ சிந்தாந்த வார்த்தைகளுக்கு தனி அகராதி தேவைப்படுகின்றது.

‘ஆணவம்’ என்றால் உயிரின் அறியாமைக்கு காரணமான ஒன்று, உமாபதி சிவாச்சாரியார் அவர்கள் ஆணவத்தினை ‘இருள்’ என்று பொருள் படும்படி உரை எழுதியுள்ளார்.
வள்ளுவர் கூட
“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.”

மு.வ உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

ஆணவம் என்பது Ego என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் பொருளல்ல. இங்கு சைவ சித்தாந்தத்தின் பதச்சொல்லாக பொருள் கொள்தல் வேண்டும். உயிரன் அறியாமைக்குக் காரணமாக இருப்பது ஆணவம். ஆனால் அறியாமையே உயிரின் மெய் இயல்பல்ல,
ஆணவத்திலிருந்து அறியாமை பிறக்கின்றது. அறியாமையிலிருந்து ‘நான்’, ‘எனது’ என்ற பற்று பிறக்கின்றது

ஆணவத்தின் இலக்கணம்
·        ஆணவம் அநாதியானது (தோற்றம்,மறைவு அற்றது)
·        ஆணவம் உயிர் அறிந்த பின் அறிந்ததை மறக்கச் செய்வது
·        எந்தவொரு பொருளின் இயல்பையும் மாற்ற இயலாது அது சில காலம் மறைக்கப்பட்டது இருக்கலாம், ஆனால் என்றைக்காவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும், மறைப்பதற்கு ஆணவம் காரணமாகலாம்
·        இந்திய தத்துவங்கள் ஆணவம் என்ற கோட்பாட்டினை ஏற்றுக்கொள்வதில்லை
·        அறிவும் ஆணவம் சேர்ந்த நிலையில் உயிர்களாகிய நாம் இருக்கின்றோம்
             ஆனால் அறியாமை உயிரின் செயற்கை நிலைதான்

·        ஆணவம் தன் இருப்பை காட்டாது, எனவே ஆணவத்தின் இருப்பை அறிய இயலாது
·        நெல்லுக்கு உமியை போல உயிருடன் கலந்திருப்பது ஆணவம்

“நெல்லுக்கு உமியும் நிகழ்செம்பினிற் களிப்பும்
சொல்லிற் புதிதன்று தொன்மையே” - சிவஞானபோதம்

புரியவில்லை என்று கவலை வேண்டாம்,,,எனக்கும் புரியவில்லை,,அய்யா ஆறு நாகப்பனின் புத்தகத்தினை படித்த பின் இதுப்பற்றி எழுதுகிறேன், அப்போது புரிந்து கொள்ள முயற்சிப்போம்
பின்குறிப்பு நடைப்பெற்ற வகுப்பில் என்னுடைய குறிப்புகளை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன்,,முழுமையாக சைவ சித்தாந்தம் படிக்க முனைவர் ஆறு நாகப்பனின் சித்தாந்த சைவம் நுாலினை நாடுக