Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Friday 8 January 2010

கள்ளிக்காட்டு இதிகாசம்

கள்ளிக்காட்டு இதிகாசம்

மண்ணின் மீது காதல் கொண்டவர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒர் நுால், கடைசி அத்தியாயங்களில் தன்னுடைய அழுத்தமான வலிகளையும், உணர்வுகளையும் அழகாக கள்ளிக்காட்டு மக்கள் வாயிலாக பதிவு செய்துள்ளார் வைரமுத்து அவர்கள்.
விவசாய மக்கள் மண் மீதும், இயற்கை மீது எவ்வளவு நெருங்கிய தொடர்புடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது இந்நுால் மூலம் தெரிந்து கொள்ள வாசிப்பவர்களுக்கு இதுவொரு வாய்ப்பு. உண்மையில் அவர்கள் உலகம் தனி உலகம்தான். நாகரீகம் என்ற பெயரில் இயந்திரத்தனமான மற்றவர்களுக்கு என்ன ஆனால் என்ன நமக்கு பிரச்சனைகள் வராத வரை Be Cool ! என்ற மானங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு இயற்கையின் அன்போடு வாழ்ந்து வரும் விவசாய மக்கள் 100 வருடங்கள் பின் தங்கி இருப்பதாகத்தான் தோன்றும். இயற்கையின் நெருங்கிய தொடர்புடன் வாழ்பவர்கள் இன்றளவும் மனிதர்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது என் கருத்து. என் வாழ்நாளில் ஒரு சில காலமெனும் விவசாயியாக வாழ வேண்டும் என்ற ஆவா உள்ளது, காலம் அதற்கான கட்டளையை பிறப்பிக்கும் போது இன்முகத்துடன் அதற்கு அடிபணிவேன்.
வட மாவட்டத்தில் பிறந்த எனக்கு தென் மாவட்ட வட்டார வழக்கின் பல வார்த்தைகள் எனக்கு அறிமுக படுத்தியது கள்ளிக்காட்டு இதிகாசம். முதலில் புரிந்து கொள்ள சற்று கடினமாகத்தான் இருந்தது. தாய்மொழி அனைவருக்கும் பொதுவானது என்றால் நடைமுறை பயன்பாடு எவ்வளவு வித்தியாசத்தை காண முடிகிறது.

மனத்தில் நின்ற சில வரிகள் இங்கே…

அத்தியாயம் 23 ல்
பெண் மீது ஆண் மட்டுமோ ஆண் மீது பெண் மட்டுமோ ஆசைப்பட்டு, கனவுகளையும் ஆசைகளையும் நெஞ்சில் கரணை கரணையாகக் கட்டி வைத்திருந்தால் இலக்கியம் அதை ஒருதலைக் காதல் என்கிறது.
ஓர் ஆணின் மனசும் பெண்ணின் மனசும் ஒன்றோடொன்று இடறி விழுந்து, இடறிவிழுந்த மனசுகளின் சம்மதத்தோடு உடம்புகளும் தொட்டுக்கொண்டு, இன்பம் போல ஒரு துன்பத்தையும், துன்பம் போல ஒரு இன்பத்தையும் ஒரே நேரத்தில் அனுபவித்தால் உலகம் அதைக் காதல் என்கிறது,
இதோ பார் நீ எனக்கில்ல; நான் உனக்கில்ல; ஆனா நீ எனக்கு வேணும், நான் உனக்கு வேணும், உன்னால் சுகம் எனக்கு என்னால் சுகம் உனக்கு, போகிற போக்கில் போவோம். காலம் எங்கே நம்மைப் பிரியச் சொல்கிறதோ அங்கே லாப நஷ்டக் கணக்குப் பார்க்காமல் பிரந்து கொள்வோம். இந்த ஒப்பந்தத்தோடு நடக்கிற உறவுக்கு காமம் என்று பெயர்
உனக்குள்ளும் அது இருக்கிறது. எனக்குள்ளும் அது இருக்கிறது. நான்கு கண்களுக்குள் மட்டும் மினுக் மினுக் என்று அது மின்னுகிறது. வட்டமிட்டுச் சுற்றி வரவுமில்லை திட்டமிட்டுச் சொல்லவும் முடியவில்லை. ரெண்டு மனசிலும் கனக்கிறது ஒரே பாரம். இறுதி வரை இறக்கி வைக்கவே இல்லை. கடைசியில் பிரிகிறோம், இதயங்களுக்குள் குழிவெட்டி பாரங்களைப் புதைத்துக் கொண்டு.
இந்த உறவுக்கு எந்த பெயரை வைக்கலாமோ அந்த பெயரை வைக்கலாம் பேயத்தேவருக்கும் முருகாயிக்கும் அனிச்சப்பூவின் அரும்புபோலிந்த அந்த மெல்லிய உறவுக்கு!!!
அடுத்தது அத்தியாயம் 26 ல்
வண்டி நாயக்கர் மரணப் படுக்கையில் இருந்த போது பேயத்தேவர் பார்க்க போகும் போது, நாயக்கர், ஒரு மனுசன் மூணு விசயத்தச் சமபாரிக்கணும் தேவரே..
சொல்லுங்க
கைகால் விழுந்த காலத்துல சொந்தமா மருந்து வாங்கத்துட்டு அந்த மருந்த எடுத்துக் குடுக்க உருத்தும் பாசமும் உள்ள ஒரு உசுரு. அய்யோ இப்படி ஆகிப் போச்சேன்னு சுத்திநின்னு அழுக ஒரு சொந்தபந்தம்..

 
இக்கதையின் மையக்கருவைப் போல் வெ இறையன்பு அவர்கள் தீட்டிய ஆத்தங்கரை ஓரம் என்ற நாவலை என் இளங்கலை வகுப்பு தமிழ் பாடமாக இருக்கும் போது படித்ததது இன்றளவும் நினைவில் இருந்து நீங்காமல் இருக்கிறது,
கதையின் கரு இரண்டும் ஒன்றாய் இருப்பினும் ஆத்தங்கரை ஓரம் அணை கட்டாமல் தடுக்க ஊர் மக்கள் நடத்தும் போராட்டம் பற்றியும் அதனைப் பற்றியும் கள்ளிக்காட்டு இதிகாசம் குடும்ப உறவுகள் அணையினால் இடம்பெயரும் மக்கள் பற்றியதாக இருக்கிறது