Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Monday 19 April 2010

சைவ சித்தாந்தம் - 4

வகுப்பு- 3- தலைப்பு பசு

பசு என்றால் உயிர் என்று பொருள் கொள்க. பசு = பச்சு = கட்டப்பட்ட பொருள்
உயிர் கட்டப்பட்ட பொருள் என்றால் கட்டும் பொருள் எது, அதுவே பாசம் (கயிறு) உயிரானது ஆணவம் என்ற மூலத்தால் கட்டப்படடுள்ளது.
சைவ ஆகமங்களாக சரியை, கிரியை,யோகம்,நாணம் ஆகியன. இது போன்று சைவ சித்தாந்தத்தினை விளக்கும் போது நாம் பல சமஸ்கிருதச் சொல்லை பயன்படுத்துகிறோம். ஏனென்றால் சைவ சித்தாந்த பழைய தமிழ் மொழியிலிருந்து சமஸ்கிருதம் சென்று மீண்டும் தமிழுக்கு வரும் போது அம்மொழிச் சொற்களையும் சேர்த்தே கொண்டு வந்ததது.  இதற்கான வரலாற்றுச் சான்றுகள் இருப்பதாக வகுப்பாசிரியர் சொன்னார் ஆனால் இன்னது என்று எடுத்துரைக்க நேரம் இல்லை எனக்கும் படிக்க வாய்ப்பு கிட்டவில்லை இது பற்றி எழுத படித்த பின்பு எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.
உயிர் ஆணவம் என்ற மூலமலத்தால் (மலங்கள் சைவ சித்தாந்தப்படி மூன்று வகைப்படும் அவைப்பற்றி பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம்) கட்டப்பட்டுள்ளது
உயிர் இருப்பதற்கான நிரூபணம்
                  சில இந்திய மதத் தத்துவங்கள் உயிர் இல்லை என்று சொல்வதுண்டு.
• பெளத்தமோ உயிர் பற்றி “உள்ளதும் அல்ல இல்லதும் அல்ல என்பது எதுவே அதுவே உயிர் என்கிறது”
• உடம்புதான் உயிர் என்கிறது தேகஆன்மவாதிகளின் மதம்
• ஐம்பொறிகள் தான் உயிர் என்கிறார்கள் இந்திரிய ஆன்மவாதிகள்
சைவத்தின் எதிர்வாதம்
உடம்பு சடப்பொருள் எனவே உயிராகாது.
ஐம்பொறிகளும் சடப்பொருள், கண் பார்க்கிறது என்றால் கண் மூலமாக உயிர் பார்க்கிறது, கண் மூலமாக மூளை பார்க்கிறது என்றால் மூளை எதன் மூலமாக பகுத்தறிகின்றது, மூளையும் ஒரு சடப்பொருள் தான்.
பெளத்தத்தின் உயிர் கருத்துக்கு அவர்கள்தான் விளக்கமாக விளக்கமளிக்க வேண்டும் !
• மனம்,புத்தி , சித்தம் , அகங்காரம் ஆகிய நுண் கருவிகள் தான் உயிர் என்கின்றனர் அந்தர் கர்ம ஆன்மவாதிகள்
• பிராண வாயு தான் உயிர் என்கின்றனர் பிராண ஆன்ம வாதிகள்

• ஐம்பொறி பிராண வாயு அந்தக்கரணம் (8) மூன்று சேர்ந்ததுதான் உயிர் என்கின்றனர் சமூக ஆன்மவாதிகள்
• பிரம்மமே உயிர் என்கிறது வேதாந்தம்
சைவ சித்தாந்தமோ இதுதான் உயிர் என்று சொல்லவில்லை, மேற்சொன்ன அனைத்தும் அல்லாதது தான் உயிர்
நிரூபணம்
உடம்பை நடத்துகின்ற ஒன்றே உயிர் உடம்பின் செயல்களை நடக்க அனுமதிக்கின்ற ஒன்றே உயிர்
இலக்கணம்
வேதாந்திகள் அவர்களின் உயிர்ப் பற்றிய கருத்துக்களை நிலைநாட்ட மாணிக்கவாசகரின்,
“சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட 
அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” என்று திருவாசகத்தின் அச்சோப் பதிகத்தில் பாடியிருக்கிறார். எனவே பிரம்மம் ஒன்றே. உயிர் சிவத்துடன் (பிரம்மத்துடன்) இரண்டற கலந்து விட்ட நிலையில் உயிர் தனி பிரம்மம்(சிவம்) தனி எனப் பிரிக்க முடியாது.
ஆனால் சைவமோ உயிர் சிவத்துடன் கலக்கும் ஆனால் எப்படி என்றால் “அப்பிரு உப்பு போல” என்று (தண்ணீரில் உள்ள உப்பு போல). ஆனால் வேதாந்திகளோ அப்பு மட்டும் இருக்கும் உப்பு இருக்காது என்கின்றனர்.
• உயிர் அநாதி (அநாதி = தோற்றம் அழிவு இல்லாதது)
• இறைவன் உயிரை படைக்கவில்லை என்கிறது சைவ சித்தாந்தம்
• உயிர்கள் பல. அவற்றின் அனுபவங்கள் பொறுத்து மாறுபடுகின்றது
• உயிர்கள் சார்ந்து அதன் வண்ணமாதல், எதைச் சார்கின்றதோ அதன் வண்ணமாகின்றது
• அழுந்தியே அறியும் தன்மை பெற்றது உயிர் (பதி (இறைவன் அழுந்தி அறியவேண்டியதில்லை, அவன் முற்றறிவுடையவன்)
• ஒன்றை அறியும் போது மற்றொன்றை அறியாது
-தொடரும்

பின்குறிப்பு நடைப்பெற்ற வகுப்பில் என்னுடைய குறிப்புகளை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன்,,முழுமையாக சைவ சித்தாந்தம் படிக்க முனைவர் ஆறு நாகப்பனின் சித்தாந்த சைவம் நுாலினை நாடுக

Thursday 15 April 2010

சைவ சித்தாந்தம்-3

வகுப்பு 2ல் நான் எடுத்த குறிப்புகளின் சராம்சம் மற்றும் எனது புரிதலும் கூடச் சேர்த்தது பின்வரும் பதிவு
வகுப்பு-2 - தலைப்பு - பதி

பதி என்றால் தலைவன் என்று பொருள், சிவபெருமானே உலகத்தின் முழுமுதற் தலைவன். சத்சித்தானந்தன்
சத் என்றால் மாற்றமில்லாத
சித் என்றால அறிவான
மாற்றமில்லாத அறிவானவன் ஆனந்தமாய் இருப்பவன் சிவன்.
தலைவன் என்றால் மக்களை வழிநடத்திச் செல்லக்கூடியவன். மனிதர்களை அறியாமையிலிருந்து அறிவார்ந்த சூழலுக்கும் துன்பத்திலிருந்து இன்பத்திற்கும் இருளிலிருந்து ஒளிக்கும் அழைத்துச் செல்பவன் பதி.
சித்தாந்த சைவத்தின் சிறப்பே நம்பிக்கை அடிப்படையானது அல்ல. எதையும் ஆராய்ந்து அறிவுப்பூர்வமாக இறையை அடையும் வழியினை கொண்டது. இது ஒர் வகையில் பகுத்தறிவு சமயம் எனலாம் ஏனென்றால் கண்ணுக்கு தெரியாத ஒன்றை இல்லையென நிரூபணம் செய்ய பகுத்தறிவு தேவையேயில்லை. சாதரணமானவர்களே சொல்லுவார்கள். கண்ணுத் தெரியாத ஒன்றை நிரூபணம் செய்யவே பகுத்தறிவு தேவை.
பதி யாபகமானவன் , யாபகம் என்றால் இங்கு இருக்கிறான் என்று பொருள். ஒர் இடத்தினை சுட்டிச் சொல்ல முடியாத ஒன்று
எவ்வாறு மூடி, எழுதும் முள் ,எழுதும் மை, ஆகியவைகள் தனித்தனியாக இருப்பினும் அவை ஒன்றாக சேர்ந்து எழுது கோல் என்று உருவாகின்றது. இது தானாகவே ஒரு மனிதனின் உதவியின்றி உருவாக முடியாது என்பது போல நாம் வாழும் இந்த பிரபஞ்சமானது நாம் வாழத் தகுந்த வகையில் ( அதாவது சரியான அளவு காற்று மழை நிலம் தட்ப வெப்பம் மற்ற வாழத் அத்தியாவசியமான சுழல்கள்) தானாக உருவாக வாய்ப்பில்லை. எனவே அதனை உருவாக்கியவன் பதி
பதியின் நிலை
இறைவனின் உண்மை நிலை சொரூபம். சொரூபம் என்றால் தனித்த ஒருமையான மெய்யான இயல்பு நிலை.
இறைவனே உயிர்களிடத்தே தொடர்பு ஏற்படும் போது தடக்க நிலைக்கு மாறுவிடுகின்றது. எடுத்துக்காட்டாக மனிதர்கள் மற்றவர்களுக்காக அவர்களுடைய உண்மை நிலையிலிருந்து மாறுகின்றோம் இதன் பெயர் தடக்க நிலை.
சிவன் சத்தி இரண்டு உண்டா என்றால் இறைவன் சொரூப நிலையில் ஒருமையானவை (சொரூபத்தில் ஒன்று தடக்க நிலையில் இரண்டு). எனவே தடக்க நிலையில சிவன் சத்தி என்ற இரு நிலைகள் ஆனால் இது ஒருமையுள் இருமை போன்றது.
பதியின் இலக்கணம்
பதி எண் குணத்தான். எட்டு குணநலங்களின் கொண்டவன் இறைவன்.
தலைவனானவன் எத்தகைய பண்புகளை பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் பதியின் இலக்கணம். பின்வரும் பண்புகளே அத்தகயவை
இறைவனின் எட்டு குணங்கள்:
1.தன் வயத்தன்
2.இயற்கை அறிவினன்
3.முற்றறிவுடையவன்
4.துாய உடம்பினன்
5.மலமற்றவன்
6.பேராற்றல் உடையவன்
7.பெருங்கருணை உடையவன்
8.பேரின்பம் உடையவன்
-வகுப்பு 3 தலைப்பு பசு (உயிர்) பற்றியது அடுத்த பதிவு
பின்குறிப்பு: நடைப்பெற்ற வகுப்பில் என்னுடைய குறிப்புகளை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன். முழுமையாக சைவ சித்தாந்தம் படிக்க முனைவர் ஆறு நாகப்பனின் சித்தாந்த சைவம் நுாலினை நாடுக 

Thursday 8 April 2010

சைவ சித்தாந்தம்-2

சைவம் பற்றிய சில கருத்துக்கள்
சைவம் என்பது ஒரு பெயர்ச்சொல். சிவனை அடித்தளமாகக் கொண்டு வழிபடும் இறைப்பிரிவு.
சைவ சமயம், சிவன் அல்லது சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் சமயம். பிற சில முக்கிய சமயங்கள் போன்று இச்சமயத்தை ஒரு குறிப்பிட்டவர் தோற்றுவிக்கவில்லை. இம்மதத்தினை இன்று 220 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர்.
மொகெஞ்சதாரோ - ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, ஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜி. யு. போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார்.
சைவத்தின் வழிபாட்டு முறைகளில் ஒன்று திருவடி வணக்கம், திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பகுதியில் 7 குறளில் திருவடி வாழ்த்து சொல்லுகிறார். சிவம் என்பது தத்துவம். சிவன் என்பது தத்துவத்தின் பெயர்
சைவ சித்தாந்தத்திற்கும் சித்தாந்த சைவத்திற்கும் உள்ள வேறுபாடு
சைவ சமயம் பல பிரிவுகளை உள்ளடக்கியது, வீர சைவம்,சித்தாந்த சைவம்,
காஸ்மீர சைவம். இதில் நாம் அறிய இருப்பது சித்தாந்த சைவம்
சித்தாந்த சைவம் பொருள் சித் = அறிவான ஆனந்த
அறிவினால் அறிந்து அதனை அறிவு உண்மை என்று ஏற்றுக் கொண்டு இறையை உணரக்கூடிய ஒர் வழி
சித்தாந்த சைவம் வாழ்க்கையின் மூலங்களாக பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் (கயிறு) இருப்பதாக வரையறுக்கிறது
இறைவன் இருப்பை நிரூபணம் செய்யும் வரையில் நம்பாதே என்கிறது சைவம். ஆக எதையும் ஆய்வுக்குட்பட்ட பின்னரே முடிவுக்கு வருதல் வேண்டுமென்கிறது சைவம்.

----தொடரும்
பின்குறிப்பு: நடைப்பெற்ற வகுப்பில் என்னுடைய குறிப்புகளை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன். முழுமையாக சைவ சித்தாந்தம் படிக்க முனைவர் ஆறு நாகப்பனின் சித்தாந்த சைவம் நுாலினை நாடுக 

Monday 5 April 2010

சைவ சித்தாந்தம்-1

சிங்கை செண்பக விநாயகர் ஆலயத்தில் நிகழும் 2010 ஏப்ரல் 02 முதல் 04 திகதி வரை மதியம் 1.30 முதல் 8.30 வரை சைவ சித்தாந்த வகுப்புகள் வெகு சிறப்பாக நடந்தது. கூட்டத்தின் நாயகராக முனைவர் ஆறு-நாகப்பன் அவர்கள் சித்தாந்த சைவம் பற்றிக் கருத்துச் செறிவுடனும் தகுந்த ஆதாரங்களுடனும் நற்றமிழிலும் நயம்பட வகுப்புகளை நடத்தினார்.
வகுப்பிற்கு வந்திருந்தவர்களில் நான்தான் ஆக குறைந்த அகவையுடையவன் என்று தோற்றத்தினை வைத்து யூகித்த வகையில் முடிவுக்கு விழைகிறேன். ஏனென்றால் வந்திருந்தவர்களில் மூன்று அல்லது நால்வரை தவிர யாவரும் 30 அகவையை எட்டியவர்கள்
சைவத்திற்கும் எனக்குமான தொடர்பு என்னவென்று கேட்டால் விவரம் அறிந்து நானாக விரும்பி இறைவனை வணங்கிய போது ஆழ்மனதில் பதிந்தவர் ,ஒர் ஆன்ம உணர்வை என்னுள் ஏற்படுத்தியவர் முழுமுதற் கடவுள் செந்தழல் மேனியன் சிவபெருமானின் லிங்க ரூபம். அந்த கால கட்டம் தொடங்கி ( பதின்ம வயதின் இறுதியில்,இந்து மதம் பற்றிய விவேகானந்தரின் ஞான தீபங்கள் புத்தங்கள் படிக்கும் போது ,சுருங்க சொல்லின் 20ம் அகவையில்) இப்போது வரையிலும் எந்த ஆலயங்களுக்கு சென்றாலும் கூட என் மனதில் முன் கற்ப கிரகத்தில் வீற்றிருப்பது நான் வாரமொருமுறை திருச்சியில் படிக்கும் நீராடலாமல் கூட ஒரு நாள் சென்று வந்த திருவானைக்காவலின் சிவ லிங்கமே என்று என் மனதில் இருத்தி வணங்குவது வழக்கமாய் கொண்டுள்ளேன்.
இது தவிர இளம் பிராயத்தில் ஊரில் மார்கழித் திங்களில் கூட்டு வழிபாட்டில் (பஜனையில்) திருவெம்பாவை மற்றும் சில சிவப்பாடல்கள் பாடியதுண்டு- மற்றபடி சைவம் பற்றிய அறிதல் தெளிதல் புரிதல் இல்லை
எனக்கு தெரிந்த வரையில் சைவ சிந்தாந்தம் என்பது ஞானத்தின் மூலம் இறைவனை அடைதல் என்று அறிந்திருந்தேன்

நான் முதல் நாள் இரண்டாம் வகுப்பிலிருந்து கலந்து கொண்டேன். பிடிக்கவில்லை என்றால் எந்நேரமும் வெளியேறி விடலாம் என்றெண்ணி எனக்குள் ஒர் உள் உடன்படிக்கையின் படிதான் ஆலயப்படியேறினேன்.
ஆனால் மூன்று நாளும் வகுப்பிற்கு செல்ல வேண்டும் என்று முதல் நாள் வகுப்பு முடிந்து மாடிப்படி விட்டு இறங்கியபோது முடிவெடுத்தேன் என்பதற்கு வகுப்பாசிரியரை விட சித்தாந்த சைவத்தினைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் முக்கிய காரணமாய் இருந்தது. அதற்கு காரணம் முதல் நாள் வகுப்பினை நயம்பட எடுத்துரைத்த ஐயா ஆகும்.
என்னுடைய புரிதலிருந்தும் என் வகுப்புக்குறிப்புகளிலிருந்தும் நண்பர் பதிவர் வெற்றிக் கதிரவன் உதவியோடும் நானறிந்த இந்த சித்தாந்த சைவக் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
வகுப்பாசான் முனைவர் ஆறு,நாகப்பன், திரு செல்வ குமார், திரு பாலாஜி ஆலய செயலர் திரு மதிவண்ணன், திரு,மாணிக்கம் மற்றும் இச்சிறப்பான காரியம் நடக்க துணை நின்று துாண்டு கோலாய் அமைந்த அனைத்துள்ளங்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகள்.

--- தொடரும்

பின்குறிப்பு: நடைப்பெற்ற வகுப்பில் என்னுடைய குறிப்புகளை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன். முழுமையாக சைவ சித்தாந்தம் படிக்க முனைவர் ஆறு நாகப்பனின் சித்தாந்த சைவம் நுாலினை நாடுக