Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Sunday 4 July 2010

வேர்களைத் தேடி...

சிங்கைப் பதிவர்கள் குழு மணற்கேணி-2009 நிகழ்வின் முத்தாய்ப்பாக வெளிவந்த மணற்கேணி என்ற நுாலில் வெளி வந்த எனது கட்டுரை 


வேர்களைத் தேடி...

                மண்ணில் மறைந்திருந்தாலும் மரங்களுக்கு வேர்கள்தான் உயிர்நாட. எவ்வளவு உயரம் வளர்ந்திருந்தாலும் வேர்களின்றி இம்மண்ணில் உயிர் வாழ இயலாது. அதுபோல உலகில் எங்கிருந்தாலும் வேர்களான பிறந்த இடத்தை மறந்தால் வாழ்க்கையில் உயிர் இருக்காது. இவ்வாறு இடம்பெயர்வால் ஏழும் நன்மை தீமைகள் பற்றிய ஒர் பார்வை தான் இச்சிறு கட்டுரை.
                நாடோடிகளாக வாழ்ந்து திரிந்த மனிதன் ஒர் இடத்தினை வாழ்விடமாக கொண்டதனால் நாகரீகம் பிறந்தது. ஆனால் இன்று நாகரீக வாழ்வு என்ற போர்வையில் இடம்பெயர்வு அரங்கேறிக் கொண்டுள்ளது. இடம்பெயர்வு என்பது காலத்தின் கட்டாயம் என்றாலும் இதனால் நமக்கு கிடைத்த வாழ்வியல் நிலையும் இழந்த வாழ்வியல் நிலையும் ஒப்பீடு செய்கின்ற கால கட்டத்தில் இருக்கின்றோம்.
                இன்றும் நமது ஊர்களில் சில குடும்பங்களின் பெயர்கள் அவர்கள் எங்கிருந்து (சேலத்தான்,திருச்சிகாரன்.கிண்டியான்) இடம்பெயர்ந்து வந்தார்கள் என்பதை உணர்த்தும் வகையில் இருக்கும். ஆனால் இத்தகைய இடம்பெயர்வுகள் சில தலைமுறைகளுக்கு முன்பு பஞ்சம்,வறட்சி, இயற்கை இடர்கள் போன்ற தவிர்க்க இயலாத காரணங்கள் இருக்கும்.அப்படி அவர்கள் இடம்பெயர்ந்து  வந்த இடமோ அவர்கள் முற்றிலும் அறியாத இடமாக இருக்காது. ஊரை ஏமாற்றி சென்றவன் தான் முன்பின் தெரியாத ஊர்களுக்கு இடம்பெயர்வார்கள். ஆனால் முன்பு கூறியவர்கன் இடம்பெயர்ந்த ஊர்கள் பெரும்பாலும் பெரும்பான்மையான உறவினர்கள் இருக்கும் இடம் அல்லது முன்பே நன்கு பரிச்சயப்பட்ட இடமாக இருக்கும். ஆகையால் இத்தகைய இடம்பெயர்வுகள் அவர்கள் மனதில் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு (அ) புதிய இடங்களில் இருக்கிறோம் என்ற உணர்வு இருக்காது. ஆனால் நாம் இங்கு ஒப்பிட இருப்பது பொருளாதார முன்னேற்றம் காரணமாக நாகரீக வாழ்வது கருதியும், இருக்கும் ஊர்களில் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்தும் அவசியமற்ற இடம் மாறுதலையே இடம்பெயர்வு என்கிறோம்.
                மனிதர்கள் குழுக்களாக கூடி வாழ்ந்து வருவதே தங்கள் இன்ப துன்பங்களை பகிர்ந்து வாழ்வதற்குதான். சார்ந்து வாழ்தல் என்பது இயற்கையின் நியதி, குழுக்களாக இணைந்திருக்க ஏதோ ஒரு காரணம் இன்றியமையாதது. இவற்றில் நாடு, மதம்,இனம் , மொழி, சாதி போன்றவை இருக்கின்றன, நாடு, மதம், மொழி, சாதி என்று மக்கள் பிரிந்து கிடக்கிறார்கள் என்ற கோணத்தில் பார்ப்பதை விட இப்படிப்பட்ட எல்லைகளுக்குள்ளாவது இணைந்து வாழ்கிறார்களே என்று பாருங்கள். இத்தகைய பிரிவுகள் தங்களுக்குள் பிரிவினை வாதம் வளர்க்காமல் இருந்தால் நன்மைதான்.
               
                சமூக வாழ்க்கை முறையில்  கோயில்கள் எப்போதும் சமூக ஒற்றுமையில் முக்கிய பங்காற்றி வருகிறது. நடைமுறையில் இன்றும் தத்தம் சமூகங்களுக்கு தனித்தனி கோயில்கள் இருக்கின்றன. அதன்பொருட்டு அவர்கள் ஒன்றிணைய வாய்ப்பு கிடைக்கிறது. பொதுவாக எல்லா கிராமங்களிலும் உள்ள தெருமுனைகளில் விநாயகர் வீற்றிருப்பார். அக்கோயிலைச் சுற்றி சிறார்கள் விளையாடி விட்டு அன்றிய வழிபாட்டில் கிடைக்கும் சுண்டலுடன் வீடு திரும்வது வழமை. இரவு உணவுக்குப் பிறகு இளைஞர்கள் பொது இடங்களில் கூடுவார்கள், பெரியவர்கள் ஒர் குழுவாக தேநீர் கடைகளிலோ அல்லது கோயில்களிலோ கூடி ஊர்க்காரியங்கள் கோயில் நற்செயல்கள் போன்றவைப் பற்றி பேசுவார்கள். பொதுவாக பெண்கள் தங்கள் தெருக்களைத் தாண்டி நட்பு வட்டத்தினை விரியச் செய்வதில்லை. ஒரே தெருவில் இருக்கும் பெண்களின் பேச்சு பொதுவாக சமையல் பற்றியும் மெகாத்தொடர்கள் பற்றியும் இருக்கும்.
                ஆனால் இந்த மெகாத்தொடர்கள் தான் இன்று இவர்களிடையே இடைவெளியை கொண்டு வருகிறது, ஏனெனில் பொழுது சாயும் நேரத்திற்குப் பின்புதான் இவர்களின் ஒன்று கூடல் நிகழும். ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாக தொடர் நாடகங்கள் வந்து விட்டன.

                பெருநகரங்களில் வாழ்பவர்கள் அவர்களின் இந்த பேச்சுகள் நேரங்களை வீணடிப்பாதாக தோன்றும், ஆனால் அவர்களின் பேச்சில் கருத்துக்கள் இல்லாமல் இருப்பினும் கூட அந்த உரையாடல்கள் அவர்களின் மனங்கள் உறவாடிக் கொள்ள உதவுகின்றன, அங்கு ஒர் மனம் இன்னொரு மனத்திற்கு ஆறுதல் சொல்லும் நம்பிக்கை தரும், துன்பத்தினை தாங்கும் சுமைதாங்கியாக இருக்கும். நான் பிறந்து வளர்ந்தது கிராமப்பகுதி என்பதால் மேற்கண்ட விடயங்களை முன் வைத்தேன். இதே போல் நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கும் இது போன்ற விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன,
கோயில்கள் போன்ற திருவிழாக்களும் சமூக ஒற்றுமையில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் இன்று விழாக்கள் நடத்த ஊர்ப் பெரியவர்களுக்கு கடினமாக உள்ளது, திருவிழாப்பணி செய்ய இளைஞர்கள் ஊரில் இருப்பதில்லை, அவர்களோ தீபாவளி பொங்கல் போன்ற பொது விடுமுறைக் காலங்களில் தான் ஊர் திரும்புவார்கள். இடம்பெயர்ந்து நகரங்களுக்கு சென்றவர்கள் கூறி கேள்விப்பட்டிருக்கிறேன் ,” கழிப்பிட வசதி இல்லாதலால் கிராமத்தில் எப்படி ஒரு வாரம் காலம் கழிப்பது”. அந்த ஊரில் தான் இடம்பெயர்வுக்கு முன்பு வரை கழித்தால் காலத்தினை. இப்போது மட்டும் எங்கிருந்து வந்ததது இந்த குறை. குறைதான் அடிப்படையான கழிப்பிட வசதி இல்லை என்பது குறைதான். ஆனால் அதை உண்டாக்க முடியாத நாம் பட்டதாரிகளாக இருந்து என்ன பயன் நாம் பிறந்த அந்த கிராமங்களுக்கு, அந்த அடிப்படை வசதியினை கொண்டு வருவது படித்தவர்களின் சமூகக் கடமை. சேரியிலிருந்து சென்று பட்டதாரியான ஒவ்வொருறும் கடமையை உணர்ந்திருந்தால் இன்று நம் நாட்டில் சேரிகள் இருந்திருக்காது
                 இடம்பெயர்வினால் வேறு ஊர்களுக்கு சென்றவர்களால் இன்று கிராமங்கள் சற்று தம் அமைப்பின் செயல்பாட்டில் மாற்றம் கண்டு வருகின்றது, இவ்வாறு இடம்பெயர்வுக்குட்பட்டு பெருநகரங்களுக்கு சென்றவர்கள் வாழ்க்கை முறை சிறப்பானதாக இருக்கிறதா என்றால் சொல்லும்படியா சிறப்பாக இல்லை.
                இடம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் சுழ்நிலையில் கட்டாயத்தின் காரணமாகவே மேற்கொண்டிருப்பார்கள், தாங்கள் படித்த படிப்புக்கு பட்டணத்தில்தான் வேலை கிடைக்கும் என்பதாலும் நாகரீக வாழ்வு வேண்டியும் குழந்தைகள் எதிர்காலம் கருதியும் இடம்பெயர்வு ஏற்பட்டிருக்கலாம்.
                இவ்வாறு இடம்பெயர்ந்த இடங்களில் புதிய உறவுகள் அமைந்து விடுகிறதா என்றால் இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை. அவை வெறும் சம்பிரதாய உறவுகளாகத்தான் அமைகின்றது. இத்தகைய சுழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு தங்களுடைய மாமா,சித்தப்பா,பெரியப்பா,அத்தை, சித்தி,பெரியம்மா உறவுகள் தரும் அன்பு கிடைப்பதில்லை, இத்தகைய அன்பு புதிய ஊர்களில் அமையும் உறவுகளில் கிடைப்பது அரிது.
                பெருநகர வாழ்க்கை முறையில் அண்டை அயலாருடன் நட்பு பாராட்ட நேரம் வாய்ப்பதில்லை, அப்படி நமக்கு நேரமிருப்பினும் அண்டை வீட்டாருக்கு நேரம் இருக்க வேண்டும், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கூட வார இறுதி நாட்களுக்கு தள்ளி வைக்கப்படுகின்ற அளவிற்கு நாம் நிலைமாற்றிக் கொண்டுள்ளோம். உணவுமுறை கூட மாறுதல் பெற்று விட்டது. குழந்தைகளுடன் அமர்ந்து பேசக் கூட நேரமின்றி வகுப்புகளுக்கு அனுப்பி விடுகிறோம். ஒரே வீட்டில் இருந்தாலும் வார இறுதி நாட்களில் மட்டும் சந்திக்கும் தம்பதிகளை கேள்விப்பட்டிருக்கிறேன்.  இது ஒருபுறம் இருக்க இதோ இவ்வருடம் சொந்த ஊருக்கு திரும்பி விடுகிறேன் என்ற வசனத்தை வாழ்நான் முழுதும் சொல்லிக்கொண்டு வாழ்க்கையை பெருநகரத்தில் கழித்தவர்களையும் கண்டிருக்கிறேன்.
          பெருநகரங்களில் வாழ்வது தவறு என்பது என் கருத்தல்ல,  அத்தகைய வாழ்க்கை முறை உங்களுக்கு உண்மையில் இன்பம் தருகிறது என்றால் கண்டிப்பாக வாழுங்கள்.
                அதைவிடுத்து பொருளாதாரத்தினை தேடி அலைவது மட்டும் இந்த வாழ்க்கை அல்ல, அதில் முழுமையாக இன்பம் கண்டவர்கள் யாருமிலர், ஆனால் வாழ்வின் இன்பத்திற்கு பொருளாதாரமும் ஒரு முக்கிய காரணி.ஆனால்  எதற்காக எதை இழக்கின்றோம் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.
இடம்பெயர்வு என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்,ஆனால் இடம்பெயர்ந்த இடத்தில் இன்பாக வாழ சுழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எல்லா மனிதர்களின் வாழ்க்கையில் ஒன்றுபட்ட குறிக்கோள் இன்பம் தான். அது கிடைக்கும் இடத்தில் இருப்பது சிறந்ததது. மகிழச்சிக்காகதான் பொருள் ஈட்டல் இன்ன பிற தேடல்கள். ஆனால் அத்தகைய தேடல்கள் மகிழ்ச்சியை சீர்குலைக்கும் எனில் அத்தகைய தேடல் தேவையற்றது.
                வேகமாக வாழ்ந்து வருவதால் பெரியதாக ஒன்றும் சாதிப்பாதாக இருந்தால் சரி என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சராசரி வாழ்க்கையில் இன்பம் பயக்கும் செயலுக்கும் நேரம் ஒதுக்குவோம்.நான் “கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது” - என்று மாபெரும் அறிவியல் மேதையான சர் ஐசக் நியூட்டனே சொல்லியிருக்கும் போது நாம் எவ்வாறு என்று சிந்திக்க வேண்டும்.
                இடம்பெயர்ந்து வாழ்ந்தாலும் அண்டை அயலாருடன் நட்பு பாராட்டுவோம், சற்றே தயக்கம் கலைந்து மனங்களுடன் உறவாடுவோம். மரத்தின் வேர்களுக்கு நீர் ஊற்றவில்லை எனில் மரம் அழிந்துவிடும், அதுபோல இடம்பெயர்ந்து வாழ்ந்தாலும் நம்முடைய வேரினை மறக்காது கிராமங்களின் முன்னேற்றத்திற்கு நீர் ஊற்றுவோம்