Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Wednesday 30 June 2010

சைவ சித்தாந்தம் - 6

வகுப்பு -2- தலைப்பு- கன்மம்

மும்மலங்களில் ஒன்றான ‘கன்மம்’ என்பதன் வடச்சொல் (தமிழர்களுக்கு வடச்சொல்லில்தான் பொருள் புரிகிறது ) கர்மா, சரியான தமிழ்ச்சொல் ‘வினை’

இந்திய பெரும்பான்மை மதங்கள் வினைக் கோட்பாட்டினை ஏற்றுக் கொள்கின்றன,எல்லா வினைகளுக்கும் விளைவு உண்டு ( நியூட்டனின் 3ம் விதி (சூர்யா படம் இல்லீங்க இது இயற்பியல் தத்துவம்). மூலகன்மம் நல்வினை தீவினை என்ற பாகுபாடு கிடையாது, வினை என்றால் ஒர் செயல், செயிலின் விளைவைப் பொறுத்தே வினைத்தன்மை நிர்ணயக்கப்படுகிறது


கன்மத்தின் (வினையின் இலக்கணம்)
• வினை ஒர் சடப்பொருள்
• வினை தானாக உயிரை சென்று பற்றாது,
• வேதாந்திகளும் முன்வினைப்பயன்,விதிப்பயன் கொள்கைகளை ஏற்றுக்கொள்கின்றனர், பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படையில் சில பண்புகள் இருக்கின்றன் அதற்குக் காரணம் முன்வினைப்பயனே
• சைவ சித்தாந்தம் டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு எதிரானது,ஒரே கால கட்டத்தில் புல் பூச்சி மற்ற எல்லா உயிரனஙகளும் தோன்றின என்கிறது சைவம்
• உயிர்களின் இயல்புக்கு மாறாக இறைவன் கூட செயல்பட முடியாது

• மனம்,வாக்கு, உடம்பு ஆகியவற்றின் உதவியால் உயிர் வினை புரிகின்றது,
மேற்கூறிய மூன்றும் அறிந்தும் அறியாமலும் என மொத்தம் அறுவகை வினை

“ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும் “ என்ற சிலம்புச் செய்தியிலிருந்து சமணமும்
(சிலம்பு இயற்றிய இளங்கோவடிகள் ஒர் சமணத் துறவி) வினைக் கோட்பாட்டினை ஏற்றுக் கொள்கிறது

வினைப்பயனிலிருந்து நீங்குதல்

கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்றால் கொன்றால் பாவம் தான் பாவத்தினை தின்றால் அனுபவித்தால் தீரும் என்று பொருள் கொள்க, கொன்றதை தின்றால் அல்ல.

• வினைப் பயனை அனுப்பவித்தல்

• வினைப் பயன் இறைவன் திருவருளால் நீ்ங்கும்

• வினையை நல்வினை தீவினை என்றில்லாமல் சமமாக பாவித்தால் வினைப்பயன் நீங்கும்

பின்குறிப்பு நடைப்பெற்ற வகுப்பில் என்னுடைய குறிப்புகளை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன்,,முழுமையாக சைவ சித்தாந்தம் படிக்க முனைவர் ஆறு நாகப்பனின் சித்தாந்த சைவம் நுாலினை நாடுக

தவிர்க்க முடியாத காரணங்களினால் அதன் பிறகு நடந்த வகுப்புகளில் நடந்தவைகளை குறிப்பு எடுக்க முடியவில்லை, மேலும் அந்த வகுப்புகளின் பொருளும் முழுமையாக என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை
இப்போதுதான் ஆறு நாகப்பன் ஐயா எழுதிய சித்தாந்த சைவம் என்ற நுாலின் மலேசியாவிலிருந்து வாங்கி உள்ளேன்,,,படிக்க படிக்க பதிவுகளும் வரும் 

Wednesday 2 June 2010

சைவ சித்தாந்தம் - 5


இரண்டாம் நாள்


முதல் வகுப்பு -தலைப்பு ஆணவம்

மும்மலங்கள்  ஆணவம் கன்மம்,மாயை என்பன. பின்வரும் பதிவுகளில் ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்.

பொதுவாக சைவ சிந்தாந்த சொற்களுக்கும் நாம் நடைமுறையில் பயன்படுத்த படும் சொற்களுக்கும் பொருள் முற்றிலும் மாறுபடுகின்றது. சைவ சிந்தாந்த வார்த்தைகளுக்கு தனி அகராதி தேவைப்படுகின்றது.

‘ஆணவம்’ என்றால் உயிரின் அறியாமைக்கு காரணமான ஒன்று, உமாபதி சிவாச்சாரியார் அவர்கள் ஆணவத்தினை ‘இருள்’ என்று பொருள் படும்படி உரை எழுதியுள்ளார்.
வள்ளுவர் கூட
“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.”

மு.வ உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

ஆணவம் என்பது Ego என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் பொருளல்ல. இங்கு சைவ சித்தாந்தத்தின் பதச்சொல்லாக பொருள் கொள்தல் வேண்டும். உயிரன் அறியாமைக்குக் காரணமாக இருப்பது ஆணவம். ஆனால் அறியாமையே உயிரின் மெய் இயல்பல்ல,
ஆணவத்திலிருந்து அறியாமை பிறக்கின்றது. அறியாமையிலிருந்து ‘நான்’, ‘எனது’ என்ற பற்று பிறக்கின்றது

ஆணவத்தின் இலக்கணம்
·        ஆணவம் அநாதியானது (தோற்றம்,மறைவு அற்றது)
·        ஆணவம் உயிர் அறிந்த பின் அறிந்ததை மறக்கச் செய்வது
·        எந்தவொரு பொருளின் இயல்பையும் மாற்ற இயலாது அது சில காலம் மறைக்கப்பட்டது இருக்கலாம், ஆனால் என்றைக்காவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும், மறைப்பதற்கு ஆணவம் காரணமாகலாம்
·        இந்திய தத்துவங்கள் ஆணவம் என்ற கோட்பாட்டினை ஏற்றுக்கொள்வதில்லை
·        அறிவும் ஆணவம் சேர்ந்த நிலையில் உயிர்களாகிய நாம் இருக்கின்றோம்
             ஆனால் அறியாமை உயிரின் செயற்கை நிலைதான்

·        ஆணவம் தன் இருப்பை காட்டாது, எனவே ஆணவத்தின் இருப்பை அறிய இயலாது
·        நெல்லுக்கு உமியை போல உயிருடன் கலந்திருப்பது ஆணவம்

“நெல்லுக்கு உமியும் நிகழ்செம்பினிற் களிப்பும்
சொல்லிற் புதிதன்று தொன்மையே” - சிவஞானபோதம்

புரியவில்லை என்று கவலை வேண்டாம்,,,எனக்கும் புரியவில்லை,,அய்யா ஆறு நாகப்பனின் புத்தகத்தினை படித்த பின் இதுப்பற்றி எழுதுகிறேன், அப்போது புரிந்து கொள்ள முயற்சிப்போம்
பின்குறிப்பு நடைப்பெற்ற வகுப்பில் என்னுடைய குறிப்புகளை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன்,,முழுமையாக சைவ சித்தாந்தம் படிக்க முனைவர் ஆறு நாகப்பனின் சித்தாந்த சைவம் நுாலினை நாடுக